மகளமுது

by முனைவர் ச. உதயகுமார்

ஈராயிரம் ஆண்டுப் பழைமையுடைய தமிழ் இலக்கிய வரலாற்றில் செய்யுள் வகைகளுக்கு இலக்கணம் வகுத்தது தொல்காப்பியம். அதனைத் தொடர்ந்து நன்னூல் இலக்கணமும், செய்யுள்கள் எங்ஙனம் செய்யப்படவேண்டும் என்பதைக் குறித்தும் பேசியது. 
செய்யுள் இலக்கணத்தில் அணி நலன்கள் பற்றிக் கூறியது யாப்பிலக்கணம் போன்ற நூல்கள். பொதுவாகத் தமிழ்ச் செய்யுள்களை ஆசிரியப் பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா இவை தவிர, விருத்தப்பா எனும் வகையில் பிரித்துப் பாக்களை எழுதுவர் புலவர்கள். சங்கஇலக்கியம் முழுவதும் ஆசிரியப் பா வகையைச் சார்ந்தது. பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் வெண்பா வகையைச் சார்ந்தன. பக்திஇலக்கியங்கள் முழுவதும் சந்தப்பாக்களால் பாடப்பெற்றன. சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற நூல்கள் விருத்தப்பாவில் அமைந்தன. சிற்றிலக்கியக் காலங்களில் பிரபந்த வகைகளுக்கு ஏற்பப் பாக்கள் உலா, பிள்ளைத் தமிழ், தூது, கலம்பகம் எனப் பல்வேறு வகையில் பாடப்பெற்றன. அருணகிரிநாதரின் திருப்புகழ் முழுவதும் சந்தப்பாக்களால் ஆனவையே. இதனையடுத்து அச்சுவடிவம் தோன்றியபிறகு, மேற்கத்திய தாக்கத்தின் காரணமாக வசனகவிதை, புதுக்கவிதை போன்றவையும் தமிழுக்கு அறிமுகம் ஆயின. இவ்வாறாகத் தமிழிலக்கியத்தில் அமைந்த செய்யுள் வகையை ஒரு பறவைப் பார்வையாக நாம் பார்த்து வரும்போது ஒரு புதிய வகையான பா வகையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் டாக்டர்.ச.உதயகுமார்  அவர்கள். இவர் அறிமுகப்படுத்தும் பா வகை இத்தாலிய நாட்டில் புகழ்பெற்ற ‘சானட்’ (ளுழnநெவ) என்னும் பா வகையாகும். இப்பா வகையை அந்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் பெட்ராக் என்னும் கவிஞர். இங்கிலாந்து தேசத்தில் இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாமஸ் வையட் மற்றும் சர்ரே எனும் கவிஞர்;கள் ஆவர். இவர்களின் அறிமுகத்தால் புகழ்பெற்ற சானட்டானது அக்காலத்தில் வாழ்ந்த இங்கிலாந்து கவிஞர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அவ்வடிவத்தால் ஈர்க்கப்பட்ட கவிஞர்களில் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் ஸ்பென்சர், மற்றவர் N~க்ஸ்பியர். இவர்கள் மேற்குறித்த சானட் வகையின் இலக்கணத்தைச் சற்றே மாற்றியும் திருத்தியும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி எழுதிக்கொண்டனர். அதனால் அவை அவர்கள் பெயரிலேயே அழைக்கப்பட்டன. 
ஸ்பென்சர் எழுதியது ஸ்பென்சேரியன் சானட் என்றும், N~க்ஸ்பியர் எழுதியது N~க்ஸ்பியரின் சானட் என்றும் வழங்கப்பெற்றன. நம் பெருமைக்குரிய பேராசிரியர் ச.உதயகுமார் அவர்கள் N~க்ஸ்பியர் மீதுகொண்ட இலக்கியப் பற்றால் அவரது 154 சானட்டுகளையும் தமிழில் கவிதையாக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு சந்தமெட்டாறு எனப் பெயரும் சூட்டியுள்ளார். 
இவ்வகையில் சந்தமெட்டாறு தொகுதி – 1 மற்றும் நட்பூறு கானம் தொகுதி – 2 என்றும் அதனை நூல்களாக வெளியிட்டுள்ளார். இவையெல்லாம் மொழிபெயர்ப்பாகவே இருக்கின்றனவே எனக் கருதிய பேராசிரியர் ச.உதயகுமார் அவர்கள் இதுபோன்றதொரு இலக்கிய மரபினைத் தமிழ் இலக்கியத்திற்;குள் கொண்டுவரவேண்டுமென்று நினைத்து ‘முகில் சூழ் முழுமதியே’ எனும் நூலையும் நமக்காகப் படைத்துத் தந்துள்ளார். 
தமிழ் இலக்கியத்தில் ‘சானட்’ போன்ற வடிவில் இவருக்கு முன்னரே பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) அவர்கள் ‘தனிப்பாசுரத்தொகை’ என்ற நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து வேறுபடுத்தித், தாம் சந்தமெட்டாறு என்னும் இவ்வடிவத்தை படைத்துத் தந்திருப்பதாக இவ்வாசிரியர் கூறுகிறார். 
;சானட்’ என்பது இசைப்பாடல் என்னும் பொருளுடையது. 14அடிகளை உடையது. எனவே அதே பொருள்படும்படி சந்தம் ூ 8 ூ 6 எனப் 14அடிகளை உடைய இசைப்பாடல் என்ற பொருளிலும், சந்தம் ூ மெட்டு ூ ஆறு என சந்தமும் மெட்டும் ஆறாகப் பாய்கின்ற பாடல்கள் எனும் பொருளிலும் இதனை இவ்வாசிரியர் பேர் சூட்டி இப்புதிய வகை மரபினில் நமக்குப் படைத்துத் தந்திருக்கும் இந்த நூலே ‘மகளமுது’ என்னும் 99 பாடல்களைக் கொண்ட அரிய நூல். ஒவ்வொரு பாடலும் 14அடிகளைக் கொண்டது. இந்த 99 பாடல்களிலும் பாடுபொருளாக இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்டிருப்பது மகளைப் பெற்ற தந்தையின் உணர்வுகளையும், தந்தையின் பார்வையில் அப் பாவையின்  (மகளின்) அழகினையும் 14வரிகளைக் கொண்டதாக ஒவ்வொரு பாடல்களையும் படைத்துத் தந்து படிப்போரை வியப்பில் ஆழ்த்துகிறார் ஆசிரியர்.
மகளின் பிறப்பில் தொடங்கி, முகம், புன்னகை, மழலை, நடை, சிணுங்கல், செறுமல், விக்கல், கோபம் எனச் சொல்லிக்கொண்டே வந்து 99ஆவது பாடலாக அமுது என முடிக்கிறார். இதுவே ‘மகளமுது’.
தமிழ் இலக்கியத்தில்; ‘பிள்ளைத்தமிழ்’ என்னும் இலக்கிய வடிவு ஒன்று உண்டு. அது ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும். அதில் குழந்தையின் வளரும் பருவங்களைப் பற்றிச் சொல்லும்போது காப்பு, தாலாட்டு, செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என வகைப்படுத்தியிருப்பர். இந்நூலாசிரியரும் மகளின் பிறப்புப் பற்றி எவ்வாறு சொல்கிறார் தெரியுமா?
“அன்புருகி என்னுயிராய் என்னின்று தோன்றினையே
 என்புருகி எல்லாமுருக என்னுள்ளே சுழன்றனையே…” எனத் தொடங்கி, “என்மனத்தும் இல்லாநன்குணத்தை நான்பெறவே கண்மணியே, கண்ணேநின்னையானென் மகவாய்ப்பெறவோ?” என முதற்பாடலை முடிக்கும்போதே, படிக்கும் நாம் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போகிறோம். மகளின் முகம் பற்றிச் சொல்லும்போது “நகங்கூட நின்முகம் காணமிகு பதமாகும் ரகம்ஏதும் நின்முகவழகுக் கிணையாகாதாகும்” எனப் பாராட்டும் இவர், “மகளென்ற சொல்லொன்று தமிழ்தன்னில் இருக்க மகளுக்கேன் அழகென்ற மற்றோர் புனைவுச்சொல்?” மகள் என்ற பேரே அழகுதானே! பின்னர் ஏன் அழகென்று ஒரு சொல்! என்று ஆச்சரியப்படுகிறார். புன்னகையை எத்தனையோ கவிஞர்;கள் பொன்நகையாக இன்நகையாகப் பாடியிருக்கிறார்கள். நம் கவிஞரோ “இடிஇடிக்க மின்னொளிர மழையுமதுவீழ படபடக்கக் கண்மலர என்மகளின் புன்னகையும் வீச…!” என வர்ணிக்கும்போது நம் மனதுக்குள் மழை பெய்கிறது. தாய்மொழிக்கு ஈடேது என மார்தட்டும் கவிஞர்களைப் பார்த்து நம் கவிஞர் கேட்கிறார், மகள்மொழிக்கு ஈடோ? அது தாய்மொழியையும், விஞ்சுகின்ற பிஞ்சுமொழி’ என்னுமிடத்தில் நமக்குக் கரவொலி எழுப்பத் தோன்றுகிறது. மகளின் நடைக்கு ஓர் எட்டுக்கு இயற்கையெல்லாம் ஈடாகாது என உறுதியோடு கூறுகிறார் அன்புத் தந்தை. இவ்வாறு 99பாடல்களில் வருகின்ற வரிகளையும் பாராட்டிச் சொல்ல, எனக்கு ஆசை ததும்புகின்றது. ஆயினும் இக்கவிப்பூக்களை நான் நுகர்ந்தபோது எனக்குக் கிடைத்த நறுமணவாடை இந்நூலைக் கற்போர்க்கும் கிடைக்கவேண்டுமல்லவா! எனவே சுருங்கச் சொல்கிறேன்…மகளின் சமையல், மகளின் தோழர்களான மயில், மைனா, நாய், அணில் என அனைவரையும் பாராட்டி, அணிசெய்கின்றார் கவிஞர். தாமரை, மல்லி, முல்லை, அல்லி, செவ்வந்தி, செம்பருத்தி, மரிக்கொழுந்து, ரோசா என மலர்களோடு ஒப்பிட்டு மகளின் அழகை பெருமைசேர்க்கும் ஆசிரியர், வேப்பமரத்தினையும் பாராட்டி வேம்பு, வேம்பூ மருந்துதானே! மகளின் செயல்களும், நம் துன்பத்திற்கு அருமருந்துதானே! எனப் பாராட்டிவிட்டு, நிறைவுப்பாடலான 99ஆவது பாடலில் மகள் அமுது எனச் சொல்லும்போது, மலரழகா? மணியழகா? கவியழகா? கதிரழகா? நிலவழகா? நீரழகா? நீலுலகம் தானழகா? எனக் கேட்டுவிட்டு, அவையெல்லாம் அழகல்ல, “அழகென்றால் அமுதாகும், அமுதென்றால் மகளாகும் உலகென்றால் மகளென்க, மகளமுதே உலகாகும். என முடித்திருக்கும் அழகே அழகு! சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பெருமகனார் 99மலர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதைப்போல நம் பேராசிரியர் ச.உதயகுமார் அவர்களும் 99நறுமணக் கவிதைப்பூக்களை ஒருங்கிணைத்து மாலையாக்கி இருக்கிறார். இப்பாடல்களில் வியப்புக்குரிய செய்தி, எதுகையும் மோனையும் இயைந்து வருகின்ற அழகு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 12வரிகளுக்கு ஓர் எதுகையும், முடிக்கும்போது இரண்டடிகளுக்கு ஓர் எதுகையும் சில பாடல்களில் 14அடிகளுக்கும் ஒரே எதுகையுமாக இவர் எடுத்துக் கையாண்டிருக்கும் சிறப்பால் இவரின் உள்ளத்தே உள்ள சொற்களஞ்சியத்தை நம்மால் உணரமுடிகிறது. நெற்களஞ்சியம் பயிராகும், உயிராகும், உணவாகும். இவரின் மகளமுது என்னும் சொற்களஞ்சியம் உலகோற்கு உணர்வாகும். இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. தொடரட்டும் இவரின் கவிதைப் பயணம்…. மலரட்டும் தமிழில் இவரது கவிதைப் பூந்தோட்டம்

Pages: 117

Publisher: First Book Publishing

DOI: https://doi.org/10.34293/fbp.9789392151804

ISBN: 978-93-92151-01-9